Tuesday, November 30, 2010

பிரச்சனை...

      உலகத்தில் பிரச்சனை இல்லாத மனிதன் உண்டா? அனைவருக்குமே ஏதோ ஒரு வகையில் பிரச்சனைகள் இருந்துகொண்டு தான் இருக்கின்றன. அதை நாம் எவ்வாறு கையாள்கிறோம் என்பதில் தான் நம் வாழ்கையின் சந்தோஷமே அடங்கி இருக்கிறது. எந்த பிரச்னையும் நம்மை படைத்தவருக்கு தெரியாமல் வருவதில்லை. நம் திறமையை சோதிக்கவே அவர் நமக்கு பிரச்சனையை தருகிறார். ஒரு மனிதன் சந்தோஷமாக இருக்கிறான் என்றால் அவனுக்கு பிரச்சனையே இல்லை என்று அர்த்தம் இல்லை அதை எவ்வாறு சமாளிப்பது என்பதை அவன் அறிந்திருக்கிறான்.

    எந்த ஒரு விஷயத்தையும் சற்றே சிந்தித்து பொறுமையாக செயல்பட்டால் மலையைப்போல் வரும் பிரச்சனையையும் தவிடுபொடி ஆக்கிவிடலாம். நம் அவசரத்தினால் பேசும் வார்த்தைகள் மற்றும் செயல்கள் நமக்கு மீண்டும் மீண்டும் பிரச்சனையை பெரிதாக்குகிறது. அதேபோல் முடிந்த விஷயங்களை அங்கேயே விட்டுவிட்டு மறுபடியும் அதை பற்றி பேசாமல் இருப்பது நல்லது. இல்லையென்றால்  அணைந்த நெருப்பை திரும்ப பற்றவைப்பது போல் ஆகிவிடும்.

    மன்னிக்க தெரிந்த மனம் இருந்தால் நாம் இந்த உலகத்தையே வென்றிடலாம். ஒருவரை நாம் மன்னிபதால் நமக்கு ஒரு இழப்பும் இல்லை. மன்னிப்பு என்பது பெரிய பெரிய மனக்காயங்களை ஆற்றிடும் மருந்து. மன்னிக்கும் மனது நமக்கிருந்தால் எந்த பிரச்சனை வந்தாலும் நம்மால் சமாளிக்க முடியும், எந்த காயத்தையும் ஆற்றிடமுடியும். எந்த விஷயத்தையும்  பெரிது படுத்தாமல் அதை சுமுகமாக எவ்வாறு மேற்கொள்வது என்பதை யோசித்து செயல்பட்டால் உலகம் நம் கையில்.

Friday, November 26, 2010

கடவுள் நமக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு இந்த வாழ்க்கை. அதை நாம் எவ்வாறு உபயோகிக்கிறோம் என்பதை அவர் கவனிதுக்கொண்டிருக்கிறார். ஆனால் நாம் சிறு சிறு காரணங்களுக்காக சண்டை போட்டுக்கொண்டும், கவலை பட்டுக்கொண்டும் இருக்கிறோம். அடுத்த நிமிடத்தை எவ்வாறு இனிமையாக்கலாம் என்பதை யோசித்து யோசித்து இந்த நிமிடத்தின் வாழ்க்கையை நாம் வாழ மறந்திவிடுகிறோம். நாம் ஒருவருக்கொருவர் எத்தனையோ காரணங்களால் வேறுபட்டு இருந்தாலும் நமக்கென இருப்பது ஒரு வாழ்க்கை. ஒரு நொடி நம் வாழ்வில் கடந்துவிட்டாலும் நம்மால் திரும்ப சென்று அதில் வாழ முடியாது. வாழ்வது ஒரு வாழ்க்கை அதை சந்தோஷமாக வாழ்வோம் ....